‘விவசாயம்’ பகுப்புக்கான தொகுப்பு

காணாமல் போகும் நாட்டுக்காளைகள்!

ஆகஸ்ட் 24, 2007
(அரசு வெளியிட்ட காங்கேயம் காளை சிறப்பு தபால் தலை!)


மணப்பாறை மாடு கட்டி , மாயவரம் ஏரு பூட்டி வயக்காட்டு உழுது போடு … என்ற புகழ்ப்பெற்ற தமிழ் திரைப்பாடலை பலரும் கேட்டு இருப்போம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட புகழ்பெற்ற நம் நாட்டின் பூர்வீக மாட்டினங்களை காண்பது அறிது ஆகி வருகிறது. பல பூர்வீக மாட்டினங்கள் இருந்த இடம் தெரியாமல் அழியும் சூழலில் இருக்கிறது.

இப்போது இருக்கும் பெரும்பாலானா மாடுகள் மேலை நாட்டு ஆங்கில மாடுகளுடன் கலப்பினம் செய்யப்பட்டு பெறப்பட்ட மாட்டு வகைகள் ஆகும்.

இந்திய மாடுகள் , அளவில் சிறியதாகவும் , திமில்களுடன் , இருக்கும். ஆனால் கடின உழைப்பாளிகள் , குறைந்த உணவு எடுத்துக்கொண்டு வறட்சி ,வெப்பம் தாங்கி வளரக்கூடியவை. உழவு, மற்றும் கறவை மாடுகள் என இருவகைப்படும்.சில இன வகைகளில் கறவைக்கும் , பாரம் சுமத்தல் , இழுவை என இரண்டுக்கும் பயன்படும்.

அதிக பால் ,மற்றும் மாட்டிறைச்சிக்காக இந்திய மாடுகள் மேற்கத்திய மாடுகளுடன் செயற்கை கருவூட்டல் மூலம் இனக்கலப்பினம்(artificial insemenation) செய்யப்பட்டது. அதன் விளைவாக பால் உற்பத்தியும் பெருகியது, எதன் ஒன்றுக்கும் பக்க விளைவு என ஒன்று இருக்கும் அதன்படி , இதனால் பல இந்திய வகை மாடுகள் வளர்ப்பது குறைந்து காலப்போக்கில் அழியக்கூடிய சூழல் வந்து விட்டது , சில பூர்வீக மாட்டு வகைகள் ஒரு சில நூறுகள் தான் எஞ்சி இருக்கின்றது என்றால் நாம் எந்த அளவு தீவிரமாக வணிக நோக்கில் கலப்பின மாடுகள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம் என்பது புரியும்.

எனவே தற்போது அப்படி பட்ட அழியும் நிலையில் உள்ள மாட்டினங்களை(endangerd species) பாதுகாக்கப்பட்டவைகளாக அறிவித்து பண்ணைகளில் பராமரித்து எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் நாட்டை சேர்ந்த பூர்வீக மாடுகளில் அழியும் நிலையில் உள்ள மாடு வகைகளில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த உம்பளச்சேரி இன மாடுகளும் ,திருச்சி மாவட்டத்தை சேர்ந்த புங்கணூர் இன மாடுகளும் முதலிடத்தில் இருக்கிறது, இவை மிக குறைந்த எண்ணிக்கையிலே இருக்கிறது.உலக அளவில் இவை அழியும் நிலையில் உள்ள அரிய இன மாடுகள் என “UNO” போன்ற அமைப்புகள் அறிவித்துள்ளது.

அதிக பால் ,இறைச்சி தரும் கலப்பினம் இருக்கும் போது நாட்டு மாடுகள் அவசிய்மா என கேள்வி எழக்கூடும். இந்நாட்டு மாடுகளின் மரபணுக்களே புதிய வகை கலப்பின மாடுகளை உருவாக்க பயன்படும் மூலம். இவை அழிந்து விட்டால் பின்னர் மீண்டும் பெறவே முடியாது. அமெரிக்கா , பிரேசில் , இஸ்ரேல் போன்ற நாடுகள் நம் காங்கேயம் காளைகளை இறக்குமதி செய்து அவற்றின் விந்தணு மூலம் வறட்சி தாங்கும் புதிய கலப்பினங்கள் உருவாக்கியுள்ளார்கள்.

நம் நாட்டில் தற்போது தான் விழிப்ப்புணர்வு ஏற்பட்டு சில அழியும் நிலையில் உள்ள மாடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசை விட சில தனியார்களின் பண்ணைகளின் தயவில் தான் இன்னும் சில இனங்கள் அழியாமல் இருக்கிறது.

இந்திய பூர்வீக மாடுகளின் வகை மற்றும் அவை காணப்படும் மாநிலம்:

1) அமிர்த மகால் -கர்நாடகா

2) பச்சூர் – பிகார்

3) பர்கூர் – தமிழ்நாடு

4) தாங்கி – மகாராஷ்டிரா

5) தியோனி – மகாராஷ்டிரா

6) கவொலாவோ - மகா

7) கீர் – குஜராத்

8) ஹல்லிகர் – கர்நாடகா

9) ஹரியானா – ஹரியானா

10) காங்கேயேம் – தமிழ்நாடு

11) காங்ரெஜ் - ராஜஸ்தான்

12) கேன்கதா – உத்திரப்பிரதேசம்

13) கேரிகார்க் – உத்திரப்பிரதேசம்

14) ஹில்லார் – மகாரஷ்டிரா

15) கிருஷ்ணா வாலி - கர்நாடகா (250க்கும் குறைவாக)

16) மால்வி – ராஜஸ்தான்

17) மேவாதி – உத்திரபிரதெசம்

18)நகோரி – ராஜஸ்தான்

19)நிமாரி – மகா

20)ஓங்கோல் – ஆந்திரா

21) பொன்வார் – உத்திரபிரதேசம்

22) புங்கனூர் – ஆந்திரா , தமிழ்நாடு ( 100 க்கும் குறைவாக)

23) ரதி -ராஜஸ்தான்

24) சிவப்பு காந்தாரி – மகா, குஜராத்

25) சிவப்பு சிந்தி - பஞ்சாப்,

26) சாஹிவால் – பஞ்சாப்

27) சிறி – மேற்குவங்கம் , சிக்கிம்

28) தார்பார்க்கர் – ராஜஸ்தான்

29) உம்பளச்சேரி – தமிழ்நாடு

30) வச்சூர் – கேரளா (100 க்கும் குறைவாக)

31) கங்காத்திரி – உ.பி, பீகார்,

32) மல்நாட் ஹிடா – கர்நாடகா

33) தோ தோ – நாகாலாந்த்

*இவற்றில் மிகவும் அருகி , அழியும் நிலையில் வெகு சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் மாடு வகைகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது.

*இது வரை அந்த வகை மாடுகளில் எந்தனை இருக்கிறது என கணக்கெடுக்பட கூட இயலாத எண்ணிக்கையில் உள்ள மாடு வகைகள் பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது. இவையும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள இன மாடுகளே!

மாடுகள் மட்டும் அல்ல , ஆடு , கோழி , ஒட்டகம் என பல இந்திய கால்நடைகளும் ,விலங்குகளும் வணிக நோக்க இனப்பெருக்கத்தினால் அழியும் நிலையில் உள்ளது , அவற்றை பிரிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்!

உள்ளது உள்ளபடி- ஓகை அவர்களின் பார்வைக்கு!

ஆகஸ்ட் 20, 2007

முன்னோட்டம்:

ஓகை அவர்கள் ஒரு பதிவிட்டு அதில் தற்காலத்தில் கிராமத்தில் லாபமற்ற விவசாயம் செய்வதை விட நகரத்தில் சாலைப்போடுதல் , கட்டுமானம், கல் உடைத்தல், மூட்டை தூக்குதல் இன்ன பிற கூலி வேலை செய்வது நிறைவான வாழ்வை தரும் எனக்கூறியுள்ளார். அதனை செல்வன், தெ.கா மற்றும் வவ்வாலுக்கு சமர்ப்பணம் என வேறு அறிவித்து , கருத்துகளும் கேட்டுள்ளார்.
ஓகை அவர்களின் பதிவு
கிருஷ்ணமூர்த்திக்கு ஜே!
ஓகை அவர்களுக்கு மிக பெரிய மனது, மாற்று கருத்துகளை வரவேற்று இருக்கிறார். அவர் எதிர்பார்ப்பை வீண் ஆக்காமல் சில பல கருத்துகளை அள்ளி விட்டேன் ஆனாலும் நீளமாக போய்விட்டது எனவே தனியே ஒரு பதிவிடுகிறேன்.

உள்ளது உள்ளபடி:

இந்திய பொருளாதரத்தை விவசாய பொருளாதாரம் என்பார்கள் , 65 சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிப்பது விவசாயம். ஆனால் தற்போது விவசாயம் செய்வதர்கான இடு பொருள் , இன்ன பிற முதலீட்டு காரணிகளின் விலை ஏறிய விகிதாசாரத்தில் விளைப்பொருளுக்கு விலை கிடைக்கவில்லை. மேலும் இயற்கையின் திருவிளையாடல் வேறு மழை பெய்து கெடுக்கும் இல்லை காய்ந்து கெடுக்கும். எனவே விவசாயிகள் பலரும் நொடித்து போய் விட்டார்கள்.

சிரமப்படுபவனுக்கு உதவாமல் அவனை அதை விட்டு வெளியேற சொல்கிறார்கள். வேறு எந்த உற்பத்தி கூடத்திலும் உற்பத்தியை நினைத்தால் கூட்டலாம் , குறைக்கலாம் , அல்லது சிறிது காலம் மூடிவிட்டு தொடரலாம். தேவைக்கு ஏற்றார்ப்போல அதிகப்படியாக உழைத்து எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு உற்பத்தி செய்யலாம். ஆனால் விவசாயத்தில் அப்படி எல்லாம் செய்ய முடியாது, 140 நாள் சாகுபடி நெல் என்றால் அத்தனை நாட்களுக்கு பிறகு தான் நெல் கிடைக்கும், நிலத்தில் ஓவர் டைம் வேலைப்பார்த்தாலும் அதன் உற்பத்தி காலம் குறையாது.

ஷூ போடுபவர் அது கிடைக்கவில்லை என்றால் செருப்பு போடலாம், தோலில் கிடைக்கவில்லை என்றால் ரப்பரில் போட்டு சமாளிக்கலாம் ஆனால் உணவுக்கு வேறு மாற்றே இல்லை. பசித்தால் சாப்பீட்டு தான் ஆக வேண்டும் ,அதுவும் எந்த உணவாக இருந்தாலும் நிலத்தில் இருந்து தான் வர வேண்டும். தொழிற்சாலையில் செயற்கையாக ஒரே ஒரு அரிசியை கூட உற்பத்தி செய்ய முடியாது.

எப்படி தமிழைப்படிக்காமல் ஒரு தலைமுறையே தமிழ் தெரியாமல் நாட்டில் உருவாகி வருகிறதோ அதே போல நகரத்திற்கு கூலி வேலை தேடி போய்விட்டால் ஒரு தலைமுறையே விவசாயம் தெரியாமல் உருவாகிவிட்டால் என்ன ஆவது. நாடு முழுக்க நிலம் தரிசாக கிடக்கும். உணவு தட்டுப்பாடு வரும்.

நம் சுய நலம் முன்னிட்டாவது விவசாயம் வாழ வேண்டாமா?

சரி விவசாயம் வாழ வேண்டும் அப்படி என்றால் விவசாயி கடைசி வரைக்கும் கஷ்டப்பட வேண்டுமா? இல்லை அதற்கும் சில தீர்வுகள் இருக்கிறது.

தீர்வு:

ஒரு தொழிலில் இரண்டு வகையான வளர்ச்சி சாத்தியம் ,செங்குத்து வளர்ச்சி, கிடைமட்ட வளர்ச்சி என்ற இரண்டு வகை சாத்தியம். விவசாயம் வெறும் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது அதில் இந்த இரண்டு வளர்ச்சியையும் கொண்டு வர வேண்டும்.

செங்குத்து வளர்ச்சி:(vertical integration)

மாடு வளர்க்கிறார், பால் கறக்கிறார் ,விற்கிறார் இது சராசரி. அதுவே பால் கறந்து விறபதோடு , அதில் இருந்து தயிர், மோர் வெண்ணை , நெய், ச்சீஸ், பால்கோவா, பால் பவுடர் என அனைத்து பால் பொருட்களும் செய்து விற்றால் அது செங்குத்து வளர்ச்சி.

இதெல்லாம் கடினம் செய்வது முடியாது தொழில் நுட்பம் வேண்டும் என்று சொல்ல கூடியவை அல்ல. வெளி நாட்டில் எல்லாம் விவசாயிகள் செய்து விற்கும் ச்சீஸ், யோகர்ட் க்கு ஃபார்ம் யோகர்ட், ச்சீஸ் என்றே பெயர். இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் இந்தியாவிலும் இவை எல்லாம் குடிசை தொழிலாகத்தான் செய்தார்கள்.

சிறுவனாக இருக்கும் போது பார்த்து இருக்கிறேன் தலையில் கூடை வைத்து மோர், தயிர், நெய் எல்லாம் விற்றுக்கொண்டு ஒரு பெண் வருவார்கள். இப்போது அப்படி வருவது இல்லை ஏன். விளம்பரங்களில் வாழும் பெரிய நிறுவனங்களின் பொருட்களை வாங்க நாம் பழகிக்கொண்டோம்!

கிடைமட்ட வளர்ச்சி!(horizontal integration)

மாட்டிற்கு என்ன வேண்டும், உணவு அதற்கு என்று தீவன புல்லும் வளர்க்கலாம். மேலும் செறிவூட்டிய தீவனம் தயாரிக்க மக்க சோளம், கம்பு போன்றவையும் வளர்க்கலாம் , தானியமும் கிடைக்கும் , தீவனமும் தயாரிக்கலாம். எண்ணை வித்துகள் பயிரிட்டு அதில் இருந்து எண்ணை எடுத்து விட்டு புண்ணாக்கை கால் நடை தீவனம் ஆக பயன்படுத்தலாம், அதிகப்படியை விற்கலாம்.

தனி ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் , இரண்டு ஏக்கர் இருக்கும் அவருக்கு இதெல்லாம் சாத்தியமா எனக்கேட்கலாம். சிறு விவசாயிகள் பத்து பேர் ஒன்று சேர்ந்து கூட்டாக இப்படி ஒரு முயற்சியில் ஈடுபடலாம். அதற்கு கடன் உதவியும் அரசு செய்யலாம்.மகளீர் சுய உதவிக்குழுக்கள் போல இது விவசாயிகள் சுய உதவி குழு!

இவை எல்லாம் சில உதாரணங்களே , இடத்திற்கு ஏற்றார்ப்போல இன்னும் என்ன என்னவோ எல்லாம் செய்யலாம்!

நிலத்தினை பன்னோக்கு வழியில் உபயோகிக்க வேண்டும்(integrated Farming)

விவசாயம் பண்ண தேவை நீர், ஆனால் அதற்க்கு தட்டுபாடு , தீர்வு, நமக்கு என சொந்தமாக ஒரு சிறு பண்ணைக்குட்டை வெட்டிக்கொள்ள வேண்டும் அதில் மழை நீரை சேகரிக்கலாம். இருக்கிற ஒரு ஏக்கரில் இதெல்லாம் சாத்தியாமா எனக்கேட்கலாம், ஒரு ஏகர் என்பது 100 சென்ட், அதில் ஒரு 5 சென்ட் ஒதுக்கினால் கூட போதும்.

5 சென்ட்டில் குட்டை போட்டால் உற்பத்தி பாதிக்குமே என்பீர்கள், குட்டையை சும்மா விட்டால் தானே , அதில் மீன் வளர்க்கலாம். அந்த குட்டைக்கு மேலெ கம்பி வலை அமைத்து கூண்டில் கோழி வளர்க்கலாம்.கோழியின் கழிவு மீனுக்கு உணவு.

குட்டையின் கரை ஓரமாக மலர் செடிகள், தென்னை , வாழை என குறைந்த அளவில் போட்டாலும் உபரி வருமானம் தானே!

நெல் வயலாக இருந்தாலும் ஆங்காங்கே சில தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைத்து தேன் சேகரிக்கலாம். நெல்லின் மலரிலும் தேன் உண்டு. மேலும் மகரந்த சேர்க்கையும் நன்கு நடக்கும்.

இதற்கு பெயர் தான் ஒருங்கிணைந்த விவசாயம்.

இதெல்லாம் ஏதோ நானே சொந்தமாக சொல்லவில்லை பல நூல்களிலும் இவை எல்லாம் இருக்கிறது. இவற்றை நடை முறைப்படுத்த ஆரம்பக்கட்ட பண உதவி தேவை , ஆலோசனை வழங்க வேண்டும் , ஒரு முறை செய்து பார்த்து விட்டால் , பின்னர் அவர்க்களே பிடித்துக்கொள்வார்கள்.

விவசாயி, விவசாய தொழிலாளி நகரத்திற்கு பிழைப்பு தேடி செல்வதால் ஏற்படும் பின்னடைவினை அடுத்துப்பார்ப்போம்

தொடரும்…

நாற்று நடும் எந்திரம் !

ஆகஸ்ட் 14, 2007
paddy seedling transplanter

இந்தியாவில் நெல் வயலில் நாற்று நடுவதற்கு மனித சக்தியே இதுவரைக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தமிழகத்தில் நடவின் போது பாடுவதற்கு நாட்டுப்புற பாடல்கள் கூட உண்டு!

தற்போது நாற்று நட எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது, நமக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம் , ஜப்பான், சீனா , கொரியா போன்ற நாடுகளில் 1970 களில் இருந்தே எந்திர நடவு நடை முறையில் உள்ளது!

நாற்று நடுவது உடல் வலிக்கொடுக்கும் ஒரு வேளை, குனிந்தவாறே தொடர்ந்து இருக்க வேண்டும். ஆண்களை விட பெண்களின் உடல் நெகிழ்வு தன்மை கொண்டது என்பதால் இதனை எளிதில் செய்வார்கள் எனவே நடவிற்கு பென்களே அதிகம் பயன்படுத்தப்படுவார்கள்.

நடவு எந்திரத்தில் இரண்டு வகை உள்ளது,

  1. மனித சக்தியால் இயங்குவது ,
  2. எந்திர சக்தியால் இயங்குவ்து.

இரண்டும் செயல்படும் தத்துவம் ஒன்றே!

எந்திர நடவிற்கு சாதாரணமாக வளர்க்கப்படும் நாற்றை பயன்படுத்த முடியாது , இதற்கென தனியாக நாற்று வளர்க்க வேண்டும். அதனை பாய் நாற்று என்பார்கள்.

அதிக அடர்த்தி கொண்ட பாலிதீன் விரிப்பின் மீது நன்கு உழுத மிருதுவான வயல் மண்,மணல் , தொழு உரம் இவற்றை கலந்து பறப்பி ஒரு படுக்கை 3 cm உயரத்திற்கு உருவாக்க வேண்டும். அதன் மீது முளைக்கட்டிய விதைகளை தூவி ,விதைகளை மூடுவது போல சிறிது மண் தூவ வேண்டும் பின் வழக்கம் போல நாற்றுகளை வளர்க்க வேண்டும். இதற்கு குறைவான நீரே போதும் , பூவாளி எனப்படும் நீர் தெளிப்பான் மூலம் நீர் தெளித்தாலே போதும்.

நாற்றுகள் வளர்ந்தவுடன் இரண்டு அடி நீளம் , 1 அடி அகலம் வருவது போல பத்தைகளாக நாற்றுடன் வெட்டி எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.

நாற்று நடும் எந்திரம்:

ஒரே நேரத்தில் எட்டு வரிசைகளில் நடும். சாய்வான நாற்று வழங்கும் வார்ப்புகள் இருக்கும். நாற்றை மனித விரல்கள் போல் எடுக்க 3 முனைகள் கொண்ட பிக்கர் (picker)எனப்படும் கொக்கிகள் இருக்கும். நாற்றுபத்திகளை அடுக்கிகொண்டு எந்திரத்தை ஓட்டி சென்றால் மட்டும் போதும். 3 மணி நேரத்தில் ஒரு ஏக்கரில் நடும். நாற்று வரிசைகிடையே உள்ள இடை வெளி(24 cm), ஒரு நாற்று முடிச்சில் எத்தனை நாற்று(3 or 5) இருக்க வேண்டும் என்பது போன்றவற்றை நாம் அமைத்து கொள்ள முடியும்.

ஒரு நாற்று நடும் எந்திரத்தின் விளை 80,000 – 1,50,000 Rs/- வரை எஞ்சின் திறனுக்கு ஏற்ப கிடைக்கிறது.

வழக்கமாக நடவு வேளைக்கு கூலியாக சுமார் 1500 ரூபாய் ஆகும். இதன் மூலம் 600 ரூபாயில் முடித்து விடலாம். இந்தியாவில் நிறைய மனித ஆற்றல் இருந்த போதிலும் தற்போது பெரும்பாலோர் நகரங்களுக்கு இடம் பெயர்வதால் விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது , இத்தகைய சூழலில் நடவு எந்திரம் உதவும்!

டா பே, எஸ்கார்ட்ஸ், போன்ற டிராக்டர் தயாரிப்பாளர்கள் இந்த எந்திரங்களை தயாரிக்கிறார்கள்.

ஆழ் நீர் நெல் சாகுபடி – பொக்காலி

ஆகஸ்ட் 13, 2007
பொக்காலி நெல் வயல்

ஆழ் நீர் நெல் சாகுபடி என்று ஒரு முறை உள்ளது , பிலிப்பைன்ஸ், தாய்லாந், பர்மா , போன்ற நாடுகளில் அதிகம் , இந்தியாவின் கடலோரம் உள்ள சில தாழ்வான நிலப்பகுதிகளிலும்(w.bengal,kerala) செய்யப்படுகிறது.கேரளாவில் ஆலப்புழா,எர்ணாக்குளம், திரிசூர் பகுதிகளில் அப்படி செய்யப்படும் சாகுபடிக்கு பொக்காலி நெல் என்று பெயர்.

அதிலும் கடலோரமாக உள்ள கழிமுகம் பகுதிகளில் கடல் நீர் புகுந்து தேங்கி உள்ள உப்பு நீரில் பொக்காலி விவசாயம் நடக்கும். இந்த நெல் வகை அதிக உப்பு சகிப்பு தன்மை கொண்டது. வேறு எந்த வகையும் இப்படி தாங்கு திறன் கொண்டது அல்ல.

இம்முறை ஒரு இயற்கை விவசாயம் ஆகும். பூச்சி மருந்து, உரம் பயன்படுத்தபடுவதில்லை.இம்முறையில் நெல்வயலில் மீன், இறால் போன்றவையும் சேர்த்து வளர்க்கப்படும் அவ்வளவு நீர் வயலில் தேங்கி இருக்கும். குறைந்த பட்சம் 30 cm நீர் நிற்கும்.பல இடங்களில் நெல் வரப்புகளுக்கு இடையே படகில் போய் அறுவடை செய்வார்கள்

எப்படி இறால், நெல் சாகுபடி நடக்கிறது எனப்பார்ப்போம்.

நீர் தேங்கி உள்ள வயலில் வரிசையாக வரப்புகள் போல உருவாக்கி அதில் நெல் நடப்படும். இடை உள்ள நீர் தேங்கியுள்ள வாய்க்கால் போன்ற பகுதியில் இறால்,/ மீன் வளர்க்கப்படும். நெல் அறுவடைக்கு பின் வைக்கோல் அப்படியே நீரில் விடப்படும் அது மக்கி புழு உருவாக உதவும் அது இறாலுக்கு உணவு. இறால் வெளியிடும் கழிவுகள் நீரில் கலந்து நெல்லுக்கு உரம் ஆகும். இறால் கழிவுகளில் அதிகம் நைட்ரஜன் உள்ளது. பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்து அது!இவ்வாறு உப்பு நீர் தேங்கி உள்ள நிலத்தில் விவசாயம் செய்வதால் அப்பகுதியின் உப்பு தன்மை மேலும் அதிகரிக்கபடாமல் தடுக்கப்படுகிறது.

சராசரியாக 200 கிலோ இறால் கிடைக்கும் ஒரு கிலோ 400 – 500 ரூபாய்க்கு விற்கப்படும். நெல் ஒரு கிலோ 5 – 7 ரூபாய் , இரண்டு டன் வரை நெல் அறுவடை ஆகும்.இதன் மூலம் விவசாயிக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.

பொக்காலி நெல்வகை – IR 64,
இறால் வகை – வெள்ளை இறால், டைகர் இறால்

கேரள அரசு பொக்காலி நெல் சாகுபடிக்கு தற்போது பல உதவிகளும் , ஆர்கானிக் ஃபார்மிங் என்பதால் பொக்காலி நெல் விற்பனைக்கு சிறப்பு சந்தைகளும் உருவாக்கி தருகிறது.மேலும் அறிவுசார் காப்புரிமைக்கும் விண்ணப்பித்துள்ளது.

இயற்கை விவசாயம் செய்யலாமா?

ஆகஸ்ட் 12, 2007

இயற்கை விவசாயம் வெகு லாபகரமானதே, அதில் அதிகம் பயன்படும் ஒரு இயற்கை நோய் எதிர்ப்பு, வளர்ச்சி ஊக்கி பஞ்சகவ்யம் .இதனால் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது .அதனை தயாரிப்பதை எப்படி என்று பார்ப்போம்!

பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது.
அவை!
1)சாணம்
2) கோமியம்
3) பால்
4) நெய்
5) தயிர்

இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.

மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.

மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யம் செய்யும்முறை:

மூலப்பொருள்:

*4 கிலோ சாண எரிவாயு கலனில் இருந்து பெறப்பட்ட சாணக்கூழ்
*1 கிலோ புதிய சாணம்
*3 லிட்டர் கோமியம்
*2 லிட்டர் பசும்பால்
*2 லிட்டர் பசு தயிர்
*1 லிட்டர் பசு நெய்
*3 லிட்டர் கரும்பு சாறு!
*12 பழுத்த வாழைப்பழம்
*3 லிட்டர் இளநீர்
*2 லிட்டர் தென்னம் கள்

இவை அனைத்தையும் வாய் அகன்ற மண்கலம் , அல்லது சிமெண்ட் தொட்டியில் விட்டு நன்றாக கலக்கவும். கலக்கப்போவது யாரு நாமளாச்சே கலக்கிட மாட்டோம்!

தொட்டியை மூடாமல் இதனை நிழலில் ஒரு வாரம் வைத்து இருக்க வேண்டும், தினசரி காலையும் மாலையும் ஒரு முறை கலக்கி விட வேண்டும்!

ஒரு வாரத்திற்கு பின் 20 லிட்டர் பஞ்சகவ்யம் தயார். இதில் ஒரு லிட்டர் எடுத்து அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்தால் 3 சதவீத அடர்த்தியுள்ள பஞ்ச கவ்யம் கிடைக்கும் அது ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதும்.

மேலும் விதைகளை நாற்றாங்களில் விதைக்கும் முன் 30 நிமிடம் பஞ்சகவ்ய கரைசலில் ஊரவைத்து விதை நேர்த்தி செய்தால் நாற்றுகள் நன்கு வளரும் நெல்லும் அதிகம் தூர்கட்டும்!

பஞ்ச கவ்யம் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கி, வளர்ச்சி ஊக்கி! இதனை தெளித்தால் மட்டும் போதும் மேற்கொண்டு எந்த பூச்சி மருந்தும் அடிக்க வேண்டாம் வயலுக்கு!

பஞ்ச கவ்யம் தெளித்த பிறகு மேலும் அதிக பலன் கிடைக்க தேங்காய் பால், மோர் கலந்து அதை ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் செர்த்து வயலுக்கு தெளித்தால் கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.