‘அரசியல் விமர்சனம்’ பகுப்புக்கான தொகுப்பு

அரசியல் சதுரங்கம்!

ஆகஸ்ட் 23, 2007


சேலம் ரயில்வே கோட்டம் அமையும் வரை ,நாளை முதல் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு செல்லும் ரயில்களை இரவுபகலாக மறியல் செய்யப்போவதாக வீரப்பாண்டி ஆறுமுகம் அறிவித்துள்ளார். இது தன்னிச்சையான ஒன்றாக இருக்க முடியாது கட்சி தலைமை உத்தரவிட்ட பின்னரே சொல்லி இருப்பார்.

இத்தனை நாளாக இல்லாமல் இப்போது ஏன் இந்த திடீர் வேகம்? கூட்டணிக்குள் இருந்து கொண்டே தமிழக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வரும் இராமதாசின் கட்சியை சேர்ந்த வேலு தான் ரெயில்வே இணையமைச்சர். இப்படி போராட்டம் நடத்துவதன் மூலம் ராமாதாசிற்கு எரிச்சல் ஊட்டும் சாதுர்யமாக கூட இருக்கலாம்.

இராம தாசு அளித்த மருந்தினையே கலைஞர் அவருக்கு திருப்பி தருகிறார் போலும்.இதன் மூலம் இணையமச்சர் வைத்து கொண்டே ஒரு ரயில்வே கோட்டம் கூட வாங்கி தரமுடியவில்லை என வெளிச்சம் போட்டு காட்டுகிறார் சாணக்கியர் கலைஞர்! தமிழக அரசினை விமர்சித்தது போல் , ஏன் மத்தியில் கேட்கவில்லை என்று கேட்காமல் கேட்கிறார்!

இரண்டு கட்சிகளும் மத்தியில் கூட்டணியில் உள்ளன , ரயில் கோட்ட விவகாரத்தில் ராமதாசர் சத்தம் காட்டாமல் இருக்கும் போது , தி.மு.க சார்பில் போராடுவதால் , இது நாள் வரை மக்கள் நலனுக்காக ஆளுங்கட்சியை விமர்சித்தேன் என்று அவர் சொல்லியது தவறு என்றும் காட்ட வசதியாகப்போய்விட்டது கலைஞருக்கு.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பார்க்கிறார் கலைஞர்!இது நாள் வரை தடுப்பாட்டம் ஆடியவர் அடித்து ஆடப் பார்க்கிறார். என்ன விளைவுகள் வரும் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

ஆனால் இதில் மகா கடுப்பு “பனம் கொட்டை தலையன்” லாலுவின் போக்கு தான், நிர்வாக ரீதியாக செய்யப்படும் ரயில்வேயின் உள்விவகாரம் இது , எற்கனவே அறிவிப்பும் செய்த ஒன்று, அதற்கும் பிறகும் கேரளாவும் , தமிழ் நாடும் பேசித்தீர்த்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இப்படி ஏற்கனவே எத்தனையோ கோட்டங்கள் பிரிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏதோ புதிதாக செய்வது போல ஏன் இந்த தயக்கம்.இவரை எல்லாம் நிர்வாக இயல் தந்தை என அதற்குள் மீடியாக்கள் தலையில் தூக்கி வைத்து ஆடுகிறது.